தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், வரவிருக்கும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தனது முழு வீரியத்தை காட்டி, மீண்டும் பல பகுதிகளில் நல்ல மழையைப் பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம், தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக, அக்டோபர் கடைசி வாரத்தில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று “மோன்தா” புயலாக மாறி ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கரையை கடந்தது. அந்தச் சமயத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஓரிரு நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது.
தற்போதைய சூழல் குறித்து பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “இன்னும் ஓரிரு நாட்களில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும். இதனால், இந்த மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இன்னும் ஒரே நாளில் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வரவிருக்கும் நவம்பர் 24ஆம் தேதி வங்கக் கடலில் ஒரு புதிய புயல் உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை :
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் நாட்களில் கனமழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இன்று (நவம்பர் 16) தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நாளை (நவம்பர் 17) மேலும் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



