மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, சமீபத்தில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், வீட்டிற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக பள்ளிக்கு சென்று வரும் அந்த மாணவி, பிளஸ்-1 வகுப்பு பயின்று வருகிறார். அவரது மூத்த சகோதரி, திருப்பதி (வயது 37) என்பவரை திருமணம் செய்து கொண்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது, அவரது அக்காவின் கணவர் திருப்பதி, பலமுறை வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தான், சிறுமி கர்ப்பமாகியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் பதிலை கேட்டு ஆடிப்போன அவரது தாய், உடனடியாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பதிக்கு எதிராக காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மதுரையில் நடந்த இந்த சம்பவம், பெண் பிள்ளைகளைக்கு வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதை காட்டுகிறது.