தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடி தொடர்பான சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது..
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் தெரு நாய்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஒரு தெருநாய் கடி சம்பவம் அரங்கேறி உள்ளது.. அங்கு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை வீடு புகுந்து தெருநாய் ஒன்று கவ்வி சென்றுள்ளது.. அதனை தடுக்க சென்ற பாட்டியையும் அந்த நாய் கடித்து குதறியுள்ளதாக கூறப்படுகிறது.. நாய் கடியால் காயமடைந்த குழந்தை, பாட்டி இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
தெரு நாய் கடிப்பதால் என்ன ஆபத்து?
ரேபிஸ் நோய் உள்ள நாய் கடித்தால், ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு தீவிரமான நோயாகும், இது மனிதர்களுக்கு ஆபத்தானது. மேலும் தெரு நாய் கடி சம்பவம் ஒருவரை மனரீதியாக பாதிக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் பயத்தில் இருப்பார்கள்.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, கருத்தடை அறுவை சிகிச்சை அல்லது தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
தெரு நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் தெரு நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் செல்லப் பிராணிகளுக்கும் முறையாக தடுப்பூசி போட வேண்டும்.