தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். கடந்த தேர்தலின் போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே என்று மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அப்போது ரூ. 5,000 கேட்ட ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்த பிறகு பணமே கொடுக்காமல் இழுத்தடித்ததாக சாடினார். இது வெறும் தேர்தல் கவர்ச்சி வாக்குறுதி அல்ல; மக்களின் கஷ்டங்களை உணர்ந்த அதிமுகவின் உறுதிமொழி என்று குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்த ரூ. 5,000 ரொக்கப் பணம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடையும் என உறுதி அளித்தார்.
Read More : ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும்..! அரசின் உத்தரவாதம் உண்டு..! ஆபத்து இல்லாத திட்டம்..!



