சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது சற்று குறையத்தொடங்கியுள்ளது. உலகளாவிய சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததை தொடர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 192.14 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,273) சரிவைச் சந்தித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,341.02 டாலர் என்ற நிலைக்குக் கீழ் இறங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இந்திய உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்தது. குறிப்பாக, நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,160 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய சூழலில், உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, இன்று இந்திய ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவே இந்தியாவில் விலை உயர்வு நீடித்து வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த சிறு விலை வீழ்ச்சி, திருமண சீசன் காலங்களில் தங்கம் வாங்க காத்திருக்கும் சாமானிய மக்களுக்குச் சற்று நிம்மதியை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பங்குச்சந்தையின் போக்கைப் பொறுத்தே இந்த விலை வீழ்ச்சி நீடிக்குமா என்பது உறுதியாகும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



