தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், மதிமுகவில் இருந்து பிரிந்து திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மல்லை சத்யா, தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோருடன் ஏற்பட்ட மோதலால் மதிமுகவை விட்டு வெளியேறிய மல்லை சத்யா, தொடக்கம் முதலே திமுக ஆதரவுப் போக்கை கடைப்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மல்லை சத்யாவின் இந்த வரவு அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ எனப் பல கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது திமுக தலைமைக்கு இமயமலை போன்ற சவாலாக உருவெடுத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற கணக்குடன் மல்லை சத்யா களம் இறங்கியுள்ளார்.
தற்போதைய சூழலில், மதிமுக போன்ற நீண்டகால கூட்டணிக் கட்சிகளுக்கே தொகுதிகளைக் குறைக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளன. இத்தகைய நெருக்கடியான நிலையில், புதிதாக ஆதரவுக்கரம் நீட்டியுள்ள மல்லை சத்யாவிற்குச் சட்டமன்றத் தேர்தலில் ஒரு ‘சீட்’ ஒதுக்கப்படுமா அல்லது அவர் வெறும் பரப்புரையோடு நிறுத்தப்படுவாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
Read More : IPL 2026 ஒத்திவைப்பு..? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!



