தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சசிகலா நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையில் தானும் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு பெரிய காரியத்தை தொடங்கும் முன்பாக, தனது தலைவர்களின் ஆசி பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்து வேண்டிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24), பசும்பொன்னில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கேற்கிறார். அங்கு வைத்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “இன்று ஒரு நல்ல தகவலை உங்களுக்கு சொல்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளிலேயே இந்த அறிவிப்பு வரவுள்ளதால், அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தனது ஆதரவாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சூழலில், வரும் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது புதிய கூட்டணியா என்பது குறித்த இறுதிக்கட்ட முடிவை அவர் இன்று பசும்பொன்னில் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



