தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் களப் பணிகளைத் திட்டமிடுவது, அமைப்பு ரீதியான பலத்தை அதிகரிப்பது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முக்கிய நிகழ்வின் போது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்கள் அதிமுக கொடியை ஏந்தி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய விஜயபாஸ்கர், “தமிழக மக்கள் நலனுக்காக, அதிமுக தான் உறுதியான மாற்று ஆட்சியை அமைக்கும் சக்தியாக உருவெடுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பூத் ஏஜெண்ட் பயிற்சி முகாம்கள், எடப்பாடி பழனிசாமியின் ‘பூத் கமிட்டி பலமே வெற்றிக்கு அடித்தளம்’ என்ற தேர்தல் உத்தியின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்திருப்பது, அதிமுகவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கருதுகின்றனர். இது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தயாரிப்புப் பணிகளிலும், மக்கள் மத்தியில் அதன் தாக்கத்தை அதிகரிப்பதிலும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.