அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக, 2011ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் 2017இல் விடுவித்தது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை ஏற்ற உயர்நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பியது. தற்போது இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் நீதிமன்றம் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்து, இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை. இருப்பினும், அவரது மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்ட்டை கோர்ட் ரத்து செய்தது.
ஆனால், துரைமுருகன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அமல்படுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக, காவல்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வருடன் துணை முதல்வர் உதயநிதி மற்றும் சட்ட வல்லுநர்களும் உடன் இருந்துள்ளனர். இந்த நிகழ்வுகள், துரைமுருகன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.