பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
மறைந்த ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாகச் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 27 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், ரவுடி நாகேந்திரன் என்பவர்தான் இந்த கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக (ஏ1) கைது செய்யப்பட்டார். கொலை, கொலை முயற்சி உட்படப் பல்வேறு கடுமையான வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன. இந்த வழக்கானது தற்போது மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்த நாகேந்திரன், கல்லீரல் தீவிர பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பரபரப்புடன் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியக் கொலை வழக்கில், ஏ1 குற்றவாளி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இதை மட்டும் மாற்றினால் உடனே 3 கிலோ வரை உடல் எடை குறையும்..!! செம ரிசல்ட்..!! டிரை பண்ணி பாருங்க..!!