தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்கம் இப்போதே விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தவெக களமிறங்கிய பிறகு, மாநிலத்தின் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகியுள்ளது. அதிமுக-வின் மூத்த முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு அரங்கேறி வரும் ரிட்டர்ன் பாலிடிக்ஸ் கட்சித் தலைமைக்கு ஒரு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளை தவெக-வை நோக்கி இழுக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வந்தார். அதன் ஒரு பகுதியாக, கொங்கு மண்டலத்தில் தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை வேகம் எடுத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இணைந்த வேகத்தில் வெளியேறுவது என்ற போக்கு தவெக-வினரிடையே ஒருவித சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
குறிப்பாக, கோவையில் சமீபத்தில் தவெக-வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் சிலர், நேற்று இரவு திடீரென அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் மீண்டும் தங்களை தாய் கழகமான அதிமுக-விலேயே இணைத்துக் கொண்டனர்.
ஏற்கனவே, கடலூர் விசிக முக்கிய நிர்வாகி அதியமான் தவெக-வில் இணைந்த ஒரே வாரத்தில் மீண்டும் திருமாவளவன் முன்னிலையில் விசிக-வுக்கே திரும்பினார். தற்போது கோவையிலும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது, தவெக-வில் நிர்வாகிகளைத் தக்கவைப்பதில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இந்த தொடர் வெளியேற்றங்கள் தவெக-வின் வியூக வகுப்பாளராக செயல்படும் செங்கோட்டையனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சித் தாவலுக்கான பின்னணி என்ன? நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவுகிறதா? என்பது குறித்து செங்கோட்டையன் தற்போது ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளதாக பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : முட்டையை இப்படி சாப்பிட்டால் விஷமாக கூட மாறும்..!! மக்களே உஷார்..!! இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!



