மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மிகவும் தொன்மை வாய்ந்த வதாரண்யேஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவராக வதாரண்யேஸ்வரர் தாயார் ஞானாம்பிகையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மூலவர், பக்தர்களுக்கு அறிவு, செல்வம், மற்றும் ஆரோக்கியத்தை வாரி வழங்குவதாக போற்றப்படுகிறார்.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, ஒரு வள்ளலைப் போல அனைத்தையும் வாரி வழங்குவதால், இந்த கோவில் ‘வள்ளலார் கோவில்’ என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் தனித்துவம் என்னவென்றால், இங்கு சிவபெருமானுக்கு எதிரில் நந்தி அமர்ந்திருக்காமல், தட்சிணாமூர்த்திக்கு எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்திருக்கும் அரிதான காட்சியை காணலாம். இந்த அரிய அமைப்பே இந்த கோவிலின் மிக முக்கியமான சிறப்பாகும்.
இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, குருபகவான் தானே நேரடியாக வழிபட்டு, பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றலைப் பெற்றதாக நம்பப்படுகிறது. எனவே, இங்கு நடைபெறும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது. குருப்பெயர்ச்சியின் போது, ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர்.
காவிரி ஆற்றில் நந்தி நீராடிய இடம் ‘ரிஷப தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரிஷப தீர்த்தத்தில் ஆற்றின் நடுவே நந்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நீராடினால், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி போன்ற ஐந்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், குருசேத்திரம் மற்றும் பிரயாகை போன்ற புனிதத் தலங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலனையும் இந்த கோவிலில் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இங்கு ஐப்பசி மாதத்தில் துலா மாத விழா, ஐப்பசி அமாவாசை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி வியாழக்கிழமை போன்ற நாட்களில் முக்கியத் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த விழாக் காலங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், சப்த கன்னியரில் ஒருவரான சாமுண்டி தேவி வழிபட்ட தலம் இது என்பதும் இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
Read More : மாதந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் அபூர்வ சிவன் கோயில்.. எங்க இருக்கு தெரியுமா..?



