சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை – திருப்பத்தூர் – சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில். வைணவ பக்தர்கள் மத்தியில் இத்திருத்தலம் ‘தென் இந்தியாவின் பத்ரிநாத்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களால் பாடப்பட்ட பாடல்களில் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது.
தெய்வங்கள் ஒன்று கூடிய திருத்தலம் :
இந்த கோயிலின் பெயர் காரணம் மிகவும் சிறப்பானது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்று கூடி, விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் குறித்து இங்கே கோஷ்டியாக (குழுவாக) முடிவு செய்த இடம் என்பதால், இது திருக்கோஷ்டியூர் எனப் பெயர் பெற்றது.
இக்கோயிலின் கட்டிடக்கலை சிறப்புகளில் முக்கியமானது, 96 அடி உயரமுடைய அஷ்டாங்க விமானம் ஆகும். 108 திவ்ய தேசங்களுள் ஒரு சில கோயில்களில் மட்டுமே காணப்படும் இந்த அஷ்டாங்க விமானம், இக்கோயிலுக்கு தனிச்சிறப்பை சேர்க்கிறது.
மூலவரின் தரிசனம்: இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவரான சௌமிய நாராயண பெருமாள் ஒரே இடத்தில் நின்ற திருக்கோலம், அமர்ந்த நிலை மற்றும் சயன நிலை என 3 நிலைகளிலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
நரசிம்மர் சிறப்பு: இங்கு உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், மற்றும் லஷ்மி நரசிம்மர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம். அஷ்டாங்க விமானத்தின் வட பக்கத்தில் நரசிம்மர் ராகு, கேது கிரகங்களுடன் இருப்பது மிகவும் வித்தியாசமான தரிசனமாக கருதப்படுகிறது. மேலும், பிரகாரத்தில் நரசிம்மர் இரண்யனை வதம் செய்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.
வழிபாடு மற்றும் திருவிழாக்கள் :
பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் இத்தலத்தை கண்ணன் (கிருஷ்ணர்) பிறந்த இடமாகப் பாடிப் போற்றியுள்ளார். இக்கோயிலின் பிரதான கோபுரம் 85 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள தங்கக்கலசம் 5 அடி உயரமுடையது.
இந்த கோவிலில் வழிபாடு செய்வதால் திருமண தடை நீங்கும் என்றும், குடும்பத்தில் செல்வம் செழித்து நிலைத்திருக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். பக்தர்கள் இங்கு நெய் தீபமேற்றி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
முக்கிய திருவிழாக்கள்: மாசி மாதத்தில் நடைபெறும் தெப்ப திருவிழா (பிப்ரவரி, மார்ச்), வைகுண்ட ஏகாதசி (டிசம்பர் – ஜனவரி) மற்றும் புரட்டாசி நவராத்திரி (செப்டம்பர் – அக்டோபர்) ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும்.
தரிசன நேரம்: தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
இங்கு கோவில் முகப்பு பகுதியில் சுயம்பு லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது, இது இத்தலத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது.
Read More : திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..? இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க..! சீக்கிரமே டும் டும் டும்..



