இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் ஈரானின் செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்தது. செம்னான் பகுதி, ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையம் அருகே அமைந்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்கியதால், இரு நாடுகள் இடையே போர் மூண்டது. இந்நேரத்தில் ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியது.
இதுமட்டுமல்லாமல், ஈரானில் சாதாரணமாக அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும். ஆண்டுக்கு, 2,100 நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், அதில் 15 முதல் 16 நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவில், 5 அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருக்கும். இதில் 15 அல்லது 16 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5 புள்ளிகளுக்கு மேல் பதிவாகும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஈரானில் 96,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்குள் அணு ஆயுத சோதனை நடத்தினாலும், நிலநடுக்கம் ஏற்படும். ஆனால், இயற்கையாக ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வு, அணு குண்டு சோதனையால் ஏற்படும் அதிர்வு ஆகியவைகளுக்கு இடையேயான வேறுபாட்டை பூகம்ப நிபுணர்களால் அறிய முடியும்.
தற்போது ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டது அல்ல, இயற்கையாக ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மற்றும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பு (சிடிபிடிஓ) ஆகியவற்றின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இதுபோன்ற இயற்கை பேரழிவுகளாலும், இருநாடுகளிடையே நடத்தப்படும் போர் வன்முறைகளாலும் பொதுமக்களே அதிகம் பலியாகின்றனர்.