தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி இணைப்புகள் மற்ற கட்சிகளுக்கு சவாலாகப் பார்க்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, மாற்றுக் கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலரும் விஜய்யை நோக்கி அணிவகுத்து வந்தனர். ஆனால், இந்த உற்சாகமான சூழலுக்குப் பேரிடியாக, இணைந்த ஒரே வாரத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் விலகியிருப்பது தவெக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) கடலூர் மண்டலச் செயலாளராக பணியாற்றியவர் அதியமான். கடலூர் மாவட்டத்தில் விசிக-வின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய இவர், கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் விஜய் முன்னிலையில் தன்னை தவெக-வில் இணைத்துக் கொண்டார். ஆனால், இணைந்த வேகத்திலேயே தனது முடிவை மாற்றிக் கொண்ட அதியமான், மீண்டும் தாய்க்கழகமான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கே திரும்பியுள்ளார்.
சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் முன்னிலையில் அதியமான் மீண்டும் கட்சியில் இணைந்தார். ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்துள்ள இந்த திடீர் அரசியல் மாற்றம் தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மற்ற கட்சி நிர்வாகிகளை தவெக-விற்கு இழுக்கும் முக்கியப் பணியைக் கவனித்து வரும் செங்கோட்டையனுக்கு, அதியமானின் இந்த ‘யூ-டர்ன்’ பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Read More : தமிழ்நாட்டில் உருவானது புதிய அரசியல் கட்சி..!! இதுதான் எங்கள் நோக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!



