தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின.
இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தனது கணவரின் மறைவு செய்தி குறித்து நடிகை ஹேம மாலினி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும், பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு நல்ல பதில் அளித்து, நலம் பெறும் ஒருவரைப் பற்றி பொறுப்புள்ள செய்தி ஊடகங்கள் இப்படிப் பொய்யான தகவல்களை எவ்வாறு பரப்ப முடியும்? இது மிகுந்த அமரியாதையானதும் பொறுப்பற்றதும் ஆகும். குடும்பத்திற்கும் அதன் தனியுரிமைக்கும் உரிய மரியாதை வழங்குங்கள்.” என்று கூறியிருந்தார்.
தர்மேந்திரா தற்போது மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் நிலைமை ஸ்திரமாக உள்ளதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். திங்கள்கிழமை, சன்னி தேவோல், ஹேமா மாலினி உள்ளிட்ட குடும்பத்தினர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு சென்றனர்.
அதேநாளில் இரவு, ஷாருக் கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் கான் ஆகியோரின் கார்கள் மருத்துவமனை வளாகத்தில் காணப்பட்டன. அதற்கு முன், சல்மான் கான் மற்றும் கோவிந்தா ஆகியோரும் நவம்பர் 10 அன்று தர்மேந்திராவை சந்தித்து அவரது நலம் விசாரித்தனர்.
தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் தர்மேந்திரா கடைசியாக அவர் “தேரி பாதோன் மேன் ஐசா உல்ஜா ஜியா” (Teri Baaton Mein Aisa Uljha Jiya) திரைப்படத்தில் நடித்தார். 2024-ல் வெளியான அந்த படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதற்குப் பிறகு, தர்மேந்திரா நடிக்கும் அடுத்த படம் “இக்கீஸ்” (Ikkis) எனப்படும் போர் நாடகம் ஆகும். இது 1971 இந்தியா–பாகிஸ்தான் போரின் போது நடைபெற்ற பசந்தர் போரில் வீரமரணம் அடைந்த இரண்டாம் லெப்டினண்ட் அருண் கெதார்பால் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படம் (biopic) ஆகும்.
இந்தப்படத்தில் அகஸ்த்ய நந்தா, ஜெய்தீப் அஹ்லாவத், ஏகவலி கண்ணா, ஸ்ரீ பிஷ்னோய், சிகந்தர் கெர், மற்றும் ஆகாஷ் ஆலோனியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இக்கீஸ் திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். தினேஷ் விஜன் மற்றும் பின்னி பட்டா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “என் அப்பா நலமுடன் இருக்கிறார்..” பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைவு செய்திக்கு மகள் ஈஷா தியோல் மறுப்பு..!



