இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் விசா விண்ணப்பங்களை மொத்தமாக ரத்து செய்ய அல்லது நிராகரிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதற்காக புதிய அதிகாரங்களைப் பெற கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது… இந்த நாடுகளில் இருந்து வரும் விண்ணப்பங்களில் “ஏமாற்று நடவடிக்கை (fraud) பிரச்சனைகள்” இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்திய மாணவர்களின் விசா மறுப்பு விகிதம் கடந்த ஆகஸ்டில் 74% ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து வருகிறது. அதாவது, இந்திய மாணவர்களில் நால்வரில் மூவரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் கூட்டு நடவடிக்கை
கனடிய ஊடகம் CBC பெற்றுள்ள உள்துறை ஆவணங்களின்படி, Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மற்றும் Canada Border Services Agency (CBSA) ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து ஏமாற்று விசா விண்ணப்பங்களை கண்டறிந்து ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புகள் சேர்ந்து ஒரு “சிறப்பு பணிக்குழுவை (special working group)” உருவாக்கி, பெருந்தொற்று, போர் அல்லது குறிப்பிட்ட நாடுகளில் ஏற்படும் சூழல்களில் “மொத்த விசா ரத்து அதிகாரம்” அளிக்கும் விதிகளை முன்மொழிந்துள்ளன.
குடிவரவு அமைச்சர் லீனா டயாப் (Lena Diab) பொதுவாக, இத்தகைய அதிகாரங்களை “அவசரநிலைகளில் மட்டும்” பயன்படுத்தப்படும் என கூறியிருந்தாலும், குறிப்பிட்ட நாடுகளை நோக்கி இது அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
மேலும், 300-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள், இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இது “கூட்டுத் துரத்தல் (mass deportation) அமைப்பை உருவாக்கும் ஆபத்து” என எச்சரித்துள்ளன.
இந்த நடவடிக்கை உண்மையான ஏமாற்று நடவடிக்கைகளை விட விசா விண்ணப்ப குவிவை (backlog) குறைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என குடிவரவு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அடைக்கலம் கோரிக்கைகள் (Asylum claims) மற்றும் தாமதம் அதிகரிப்பு
ஆவணங்களின்படி, இந்திய குடிமக்களிடமிருந்து வரும் அடைக்கலம் கோரிக்கைகள் கடந்த 2023 நடுப்பகுதியில் மாதத்துக்கு 500-க்கும் குறைவாக இருந்த நிலையில், 2024 ஜூலை மாதத்திற்குள் 2,000-க்கு நெருங்கியுள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து வரும் தற்காலிக குடியிருப்பு விசா விண்ணப்பங்களின் செயலாக்க நேரம் 30 நாட்களிலிருந்து 54 நாட்களாக உயர்ந்துள்ளது.
மேலும், கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, அனுமதி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2024 ஜனவரியில் 63,000-இலிருந்து, 2024 ஜூனில் 48,000-ஆகக் குறைந்துள்ளது.
இந்தியா இன்னும் கனடாவுக்கு அதிகபட்ச மாணவர்களை அனுப்பும் நாடு என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால், 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ள நாடுகளில், இந்தியாவே தற்போது அதிகப்படியான விசா மறுப்பு விகிதம் கொண்ட நாடாக மாறியுள்ளது.
2024 ஜூலை நிலவரப்படி, 1,873 விண்ணப்பதாரர்கள் மீது கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு சட்ட அறிவிப்புகள் மற்றும் அடுத்தடுத்த வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Read More : அதிக ஆபத்து.. மில்லியன் கணக்கான கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! முழு விவரம் இதோ..!



