வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மின்சாரம் பாய்ச்சிப் படுகொலை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (43), டயர் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், மதுவுக்கு அடிமையானதுடன், வீட்டில் தனது மனைவி கலையரசியுடன் (32) அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், மனைவி தன் மீது அக்கறை காட்டவில்லை என கருதிய கருணாகரன், அவர் மீது தீராத சந்தேகம் கொண்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியை தீர்த்துக்கட்ட கருணாகரன் கொடூரமான முடிவை எடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு, கலையரசி தனது 3 குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கருணாகரன் இரும்பு கம்பியைப் பயன்படுத்தி கலையரசியின் கை, கால்களில் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொன்றுள்ளார்.
பின்னர், எதுவுமே தெரியாதது போல் மறுநாள் காலை தனது மாமனாருக்கு தொடர்பு கொண்டு, கலையரசி திடீரென இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளிகொண்டா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சந்தேகத்தின் பெயரில் மனைவியை கொடூரமான முறையில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதை கருணாகரன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



