மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை, பெண் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் தனது காதலனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..
காயமடைந்த அவர் எப்படியோ உதவி பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை சான்டாக்ரூஸில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் பேசிய போது “ புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அந்தப் பெண், 42 வயதுடைய தனது கள்ளக்காதலனை வியாழக்கிழமை அதிகாலை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அந்த ஆண், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுடைய நாத்தனாரின் கணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 4 மற்றும் 7 வயதான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு காயமடைந்த அந்த ஆண் முதலில் அருகிலுள்ள வி.என். தேசாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சியான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சியான் மருத்துவமனை டீன் டாக்டர் பிரமோத் இங்கலே “எங்கள் யூராலஜி மற்றும் பொதுச் சிகிச்சை பிரிவுகள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தன. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்,” என்றார்.
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோடிய குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினர் இதுகுறித்து பேசிய போது “ குற்றம் சாட்டப்பட்ட பெண் பாதிக்கப்பட்ட நபரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டுச் செல்ல மறுத்தார். இந்த உறவு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அவரது வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்ததாகவும், தனது குடும்ப நிலையைப் புரிந்து கொள்ளுமாறு அவர் பலமுறை அந்த பெண்ணிடம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஆண் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் பீஹாரில் உள்ள தனது ஊருக்குச் சென்றுவிட்டார். ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, டிசம்பர் 19 அன்று மீண்டும் மும்பைக்கு திரும்பினார். டிசம்பர் 24 அன்று பாதிக்கப்பட்ட நபர், இருவருக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால் இந்த உறவைத் தொடர முடியாது என மீண்டும் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், புத்தாண்டைக் கொண்டாட இனிப்பு சாப்பிட வருமாறு கூறி அந்த பெண் அவரை தனது வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர் வெளியேற முயன்றபோது, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால் அவரது அந்தரங்க உறுப்புகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்..
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளும் அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து தப்பி தனது மகன் மற்றும் சகோதரரை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். அவர்கள் உடனடியாக அவரை வி. என். தேசாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த பெண் பீஹாரில் இருந்தபோதும் தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது தப்பியோடி இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான ஆயுதம் பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்தியது மற்றும் குற்றமுறை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.



