கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வசரண் (25). டெம்போ டிரைவராக உள்ளார். இவரது மனைவி ரேஷ்மா (20). இருவரும், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமானதில் இருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால் கணவன்-மனைவி இருவருமே அடிக்கடி தகராறு செய்தும், சண்டையிட்டும் வந்துள்ளனர்.
வழக்கம் போல் சம்பவத்தன்று ரேஷ்மாவிற்கும் செல்வசரணுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வ சரண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அழுதுகொண்டேயிருந்தார். இறுதியில் ரேஷ்மா தற்கொலை செய்ய முடிவு செய்தார். உடனே ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்த ரேஷ்மா, வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் சொல்லிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேஷ்மாவின் அம்மா, நாகர்கோவிலில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். உடனே உறவினர்களும், ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். ரேஷ்மாவின் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் ரேஷ்மா தூக்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரேஷ்மா வீட்டிற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒன்றரை வருடத்தில் இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



