உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், தனது வீட்டிற்கு அருகே இளைஞரால் தொடர்ந்து பாலியல் ரீதியிலான தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த நபர், வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் பெண்ணை கிண்டல் செய்வதுடன், தொடர்ந்து ஆபாசமான சைகைகளை காட்டியுள்ளார்.
இந்த அத்துமீறல்கள் குறித்து யாரிடமும் கூறினால், தன் மீது தவறு உள்ளதாக சித்தரிப்பார்கள் என்று பயந்த அப்பெண், ஆரம்பத்தில் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த இளைஞரின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, தொடர்ந்து முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அந்த இளைஞர் வீட்டின் அருகே நின்றிருந்த இளம்பெண்ணிடம் மீண்டும் ஆபாச சைகை காட்டியுள்ளார். வழக்கம் போல் அப்பெண் அதைப் புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அங்கிருந்து செல்லாமல் அப்பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தான் அணிந்திருந்த ஆடைகளை திடீரென அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக அவர் முன்பு உலா வந்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான செயலைக் கண்ட அப்பெண், உடனடியாக செல்போனில் வீடியோ எடுத்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதனைக் கண்ட அந்த இளைஞர், ஆத்திரத்தில் அப்பெண்ணின் செல்போனைப் பிடுங்கியுள்ளார். அத்துடன் நிற்காமல், அந்த இளைஞர் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிலரைத் திரட்டிக்கொண்டு, 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேருடன் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். மேலும், அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு, அவரது வயிறு மற்றும் பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கி மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை தடுக்க முயன்றபோது, அந்தக் கும்பல் அவரையும் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் அப்பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர் மற்றும் அவர் வீட்டில் இருந்தவர்கள் உள்ளிட்டோர் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் வேண்டுமா..? அப்படினா இந்த மாதிரி பிளான் பண்ணுங்க..!!