சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வசிக்கும் மனோகரன் – ராணி தம்பதியின் கடைசி மகன் சரவணன் (31). இளம் வயதிலேயே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை சந்தித்த சரவணன், கடந்த மே மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது பாலினத்தை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு வனிதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு வடக்கு ரயில்வே லைன் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழத் தொடங்கினார்.
சமீபத்தில், வனிதாவின் சகோதரி மரகதம், வழக்கம்போல் அவரது வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் கதவு வெளியில் இருந்து குச்சியால் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து, சற்று சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, திருநங்கையான வனிதா, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். முகம் துணியால் மூடப்பட்டு, வாய்க்குள் துப்பட்டா திணிக்கப்பட்டிருந்தது. தலையில் பலத்த காயங்கள் இருந்ததும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை ஆய்வாளர்களும் இணைந்து வீட்டை சோதித்தபோது, ஒரு இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், வனிதாவுக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது நவீன் என்ற வாலிபருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி வாடகை வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாக பக்கத்து வீட்டார் தெரிவித்துள்ளனர். இருவரும் இரவு மது அருந்திய பிறகு, பண விஷயமாக சண்டை ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில் ஆத்திரம் அடைந்த நவீன், வனிதாவை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.