இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி, முன் பின் தெரியாதவர்களை நம்பிச் சென்று, மோசடி மற்றும் மிரட்டலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “முதலை வாயில் தலையைக் கொடுப்பது போல” இளைஞர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கவுதம் என்ற மென்பொருள் பொறியாளர், புதுப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வந்த விபரீத ஆசையால், ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் (Grindr) என்ற டேட்டிங் செயலியைப் பயன்படுத்தியுள்ளார். அந்தச் செயலியில் இவருக்கு ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
ராஜேஷ் அழைத்ததன் பேரில், கவுதம் தனது பைக்கில் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காலியிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத கவுதம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் கவுதமை தாக்கிய அந்தக் கும்பல், அவரிடம் இருந்த செல்போனைப் பறித்துள்ளது. பின்னர், ஜிபே மூலம் ரூ. 24,000 தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பிறகு, செல்போனை திரும்ப கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், கவுதமை தனிமையில் சந்திக்க அழைத்த ராஜேஷ்தான், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் பணப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, ராஜேஷ் (25), மணிகண்டன் (23), வரதராஜ் என்ற சஞ்சய் (24), கோகுல் (22), கணேஷ்குமார் (24), கவுதம் (19) உள்ளிட்ட ஆறு பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மோசடி கும்பல் மேலும் பல இளைஞர்களிடம் இதுபோலப் பணத்தைப் பறித்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



