வங்கிக் கணக்கு முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வரை, அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான கட்டணங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.100-ஆகவும், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் திருத்தங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்தச் சூழலில், கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விரைவில் இ-ஆதார் செயலி : ஆதார் சேவைகளை எளிதாக்கும் நோக்கில், மத்திய அரசு விரைவில் இ-ஆதார் (E-Aadhaar) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி, இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயலி, ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாகச் செயல்படும். இதன் மூலம், பொதுமக்கள் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், தங்கள் ஸ்மார்ட்போனிலேயே முகவரி, பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். சிங்கிள் டிஜிட்டல் இன்டர்பேஸ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, மக்களின் ஆதார் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.