கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் வெளியே வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் உட்பட சில தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தது. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளியே வந்த தவெக நிர்வாகிகள், நேற்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முதலில் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் விஜய்யைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.
சந்திப்பை முடித்துக்கொண்ட புஸ்ஸி ஆனந்த், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். கரூர் விபத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் விஜய்யைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Read More : பட்டப்பகலில் பயங்கரம்..!! திமுக பிரமுகரை ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொன்ற கும்பல்..!! அடையாறில் அதிர்ச்சி..!!



