ஒவ்வொரு படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்களில் நடிகர் மாதவன் முக்கியமானவர். இவர் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்திற்காக அதிகரித்த உடல் எடையை, அதிவேகமாக, எந்தவொரு தீவிரப் பயிற்சியோ அல்லது உணவுப் பிற்சேர்க்கைகளோ (Supplements) இல்லாமல் குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த மாதவன், படப்பிடிப்பு முடிந்தவுடன் (2022-இல்) எடையைக் குறைக்கும் தேவை ஏற்பட்டது. இதுபற்றிப் பேசிய மாதவன், “நான் வேகமாக எடையை குறைக்க வேண்டியிருந்தது. ஆனால், அறுவை சிகிச்சை, தீவிர உடற்பயிற்சி அல்லது குறுகிய கால டயட் முறைகளை நான் பின்பற்றவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 21 நாட்களிலேயே குறிப்பிடத்தக்க எடையைக் குறைத்து, தனது உடல் நலத்தின் மீது அக்கறை காட்டும் அனைவருக்கும் இவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார்.
தற்போது 55 வயதாகும் நடிகர் மாதவன், தன் உடலுக்கு எது ஒத்துக்கொள்ளும், எந்தெந்த உணவுகள் தனக்கு ஒவ்வாமை கொடுக்கிறது என்பதை அறிந்துகொண்டதுதான் தனது எடை குறைப்பின் பெரிய ரகசியம் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது உணவில் ஒவ்வாமை தரும் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார்.
இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent Fasting): 21 நாட்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உணவு உண்ணும் ‘இடைப்பட்ட உண்ணாவிரத’ முறையைப் பின்பற்றி வந்தார்.
நன்கு மென்று சாப்பிடுவது: மாதவன் கடைப்பிடித்த மிகவும் முக்கியமான பழக்கம், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதுதான். “சாப்பிடும் உணவை சில நேரங்களில் 45 முதல் 60 முறை மென்று சாப்பிடுவேன். இப்படி சாப்பிடும்போது செரிமானம் மேம்படுவதுடன், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களும் முழுமையாக உடலில் சேரும்” என்று அவர் கூறியுள்ளார்.
உணவு நேரம்: ஒரு நாளின் தனது கடைசி உணவை மாலை 6.45 மணிக்குள் முடித்துக் கொள்ளும் மாதவன், மதியம் 3 மணிக்கு மேல் எந்த திட உணவையும் எடுத்துக்கொள்வதில்லை. சமைத்த உணவைச் சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைக்க மாதவன் எந்தத் தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடித்துள்ளார்.
* தினமும் காலையில் நீண்ட நடைப்பயிற்சி செய்வது.
* இரவில் சீக்கிரமாகத் தூங்கச் செல்வது.
* தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது.
* நிறையத் தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிச் சாறுகள், பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது.
* செரிமானத்திற்கு உதவும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாக தவிர்ப்பது.
‘ராக்கெட்ரி’ படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகருக்குச் சென்று 21 நாட்கள் தங்கியிருந்தபோது, மாதவன் மேற்கூறிய இந்த அனைத்து விஷயங்களையும் முழுமையாக செயல்படுத்தியுள்ளார். நேற்று (டிசம்பர் 5) மாதவன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ என்ற பாலிவுட் படத்திலும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் தன் உடலை மாற்றிக்கொள்ளும் மாதவனின் இந்த அர்ப்பணிப்பு, திரையுலகைத் தாண்டி ஃபிட்னஸ் மீது அக்கறை கொண்ட அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.



