நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் விஷால்.. செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.. இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார் விஷால். தனது திரை வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகராகவே வலம் வருகிறார்..
மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் விஷால் இருந்து வருகிறார்.. அவர் தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது 47 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிகளாகவே இருந்து வருகிறார்..
எனவே “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகில் எழுந்து வந்தது. ஆனால், அவர் நடிகர் சங்க புதிய கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்திருந்தார். இதனால், அந்த கட்டடத்தின் பணி முடிவடையும் நாள் தான் அவரது திருமண நாளாகக் கருதப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில், விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.
இந்த நிலையில் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.. விஷாலின் பிறந்தநாளான இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீட்டில், அவரின் குடும்பத்தினர் முன்னிலை எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.. இதுதொடர்பான புகைப்படத்தையும் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..
மேலும் தனது பதிவில் “ என்னுடைய சிறப்பு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்ததற்காக இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் அன்பான அனைவருக்கும் நன்றி. சாய்தன்ஷிகாவுடன் இன்று நடந்த எனது நிச்சயதார்த்தம் பற்றிய நல்ல செய்தியை எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பாசிட்டிவாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் விஷால் – சாய் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
Read More : “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்..” ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்!