2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது..
இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றனர்.. இதில் சித்தார்த் உயிர் தப்பிய நிலையில் பிரதியுஷா உயிரிழந்தார்.. இருவரும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்தனர் விசாரணையில் தெரியவந்தது.
சித்தார்த் ரெட்டி மீது பிரிவுகள் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் பிரிவுகள் 309 (தற்கொலைக்கு முயற்சி) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 23, 2004 அன்று பெருநகர அமர்வு நீதிபதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்தார். பின்னர் அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அது டிசம்பர் 28, 2011 அன்று தீர்ப்பளித்தது, சிறைத் தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தை ரூ. 50,000 ஆக உயர்த்தியது. பிரதியுஷாவின் தாயார் 2012 இல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த நிலையில் நடிகை பிரதியுஷா மரண வழக்கில் 24 ஆண்டுக்கு பின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் காதலன் சித்தார்த் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிறை தண்டனைக்கு எதிரான சித்தார்த் ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 4 வாரங்களில் அவர் சரணடையௌம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சித்தார்த் ரெட்டி நான்கு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பிரதியுஷாவின் தாயார் இதுகுறித்து பேசிய போது “உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே உச்ச நீதிமன்றமும் கூறியது. சித்தார்த் ரெட்டி எங்கிருந்தாலும் வந்து சரணடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்கு இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் என் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு.. கொல்லப்பட்டாள் என்று நான் நம்புகிறேன்.. என் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. யார் என்ன சொன்னாலும், இந்த இருவரையும் பற்றி வேறு எதையும் நான் நம்பும் நிலையில் இல்லை. என் குழந்தைக்கு உண்மையான நீதி கிடைக்கவில்லை. சித்தார்த் ரெட்டிக்காக ஆயுள் தண்டனை கோரி நான் ஆரம்பத்திலிருந்தே போராடி வருகிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் எனது 14 வருட போராட்டம்.. 2011 முதல் போராடி வருகிறேன்.. உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை.. இங்கே இரட்டிப்பாகும் என்று நினைத்தேன். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, என் நம்பிக்கைகள் தகர்ந்து போயின. என் மகளுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை. “அவளுடைய ஆன்மா சாந்தியடைந்ததாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.



