ஆபாச செய்திகளை வெளியிட்டதாகவும், முன்னாள் மண்டியா எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இரண்டு பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது இந்த வார தொடக்கத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர், “ஆன்லைனில் தவறான உள்ளடக்கத்தை பதிவிட்ட மேலும் பதினொரு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
ஜூலை 28-ம் தேதி, நடிகை ரம்யா, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 43 சமூக ஊடக கணக்குகள் மீது முறையான புகார் அளிக்க போலீஸ் கமிஷனரை சந்தித்தார்.
ஜூலை 24 அன்று உச்ச நீதிமன்றத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கு நடவடிக்கைகள் குறித்து அவர் பதிவிட்டிருந்தார்.. அதில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கோரிய நிலையில், அவர் மீது பலரும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பத் தொடங்கினர்..
கன்னட நடிகர் தர்ஷன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு, பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு மற்றும் சமூக ஊடக கண்காணிப்புக் குழு துஷ்பிரயோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 13 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக சிங் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடிகர் தர்ஷனின் ரசிகர்களா என்று கேட்டபோது, அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று சீமந்த் குமார் சிங் கூறினார். “சிசிபி மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே ரம்யா தனது எக்ஸ் பக்கத்தில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, பெங்களூரு போலீஸ் கமிஷனர் மற்றும் முழு சிசிபி குழுவினருக்கும் உடனடி பதிலுக்கு நன்றி தெரிவித்தார்.
அவரின் பதிவில் “பெங்களூரு நகர காவல்துறை பெண் வெறுப்பு பயங்கரவாதத்திற்உ எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.. எங்கள் நகரத்தில் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சட்டத்தின் கையிலிருந்து தப்பிப்பது கடினம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..