தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆர் உடன் முதல் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் உடன் மட்டும் 26 படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் நடித்தார்.
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. தற்போது, 87 வயதான சரோஜா தேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மறைவுக்கு முன் நடிகை சரோஜா தேவியின் கடைசி நிமிடத்தில் என்னென்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தினமும் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பார். பின்னர் குளித்துவிட்டு பூஜை செய்வார். அதன் பிறகே காலை உணவு உண்பார். இன்றும் வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்’ என்று அவரது மேலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான தஷாவரா கிராமத்தில், இறுதி சடங்குகள் நடந்தன. இதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சரோஜா தேவியின் உடல் அவரது தாய் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. சரோஜா தேவியின் விருப்பப்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
Read more: 2028 ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்: ஜூலை 12 முதல் டி20 போட்டிகள் தொடக்கம்..!!