இனிமையான குரலால் பல ஆண்டுகள் இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை சுலக்ஷனா பண்டிட், மும்பையில் நேற்று (நவ.6) காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், தனது 71-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசை குடும்பத்தின் வாரிசு :
சுலக்ஷனா பண்டிட், மிகச் சிறந்த இசைக் குடும்பப் பின்னணியை கொண்டவர். உலகப் புகழ்பெற்ற பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் மருமகள் இவர். மேலும், ‘ஜதின்-லலித்’ என்ற பிரபலமான இசையமைப்பாளர் இரட்டையரின் சகோதரியும் இவரே. ஒன்பதாவது வயதிலேயே பாடத் தொடங்கிய சுலக்ஷனா, 1967-ல் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
அவர் பாடிய பல பாடல்களில், 1975-ல் வெளியான ‘சங்கல்ப’ படத்துக்காகப் பாடிய “Tu Hi Sagar Hai Tu Hi Kinara” என்ற பாடல் அவருக்குப் பெரிய புகழைக் கொடுத்தது. இந்தப் பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதையும் அவர் வென்றார். புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருடன் இணைந்து அவர் பாடிய பாடல்களும் மிகவும் பிரபலம்.
பாட்டு மட்டுமின்றி, சுலக்ஷனா பண்டிட் நடிகையாகவும் பெரிய அளவில் அறியப்பட்டார். 1975-ல் நடிகர் சஞ்சீவ் குமாருடன் இணைந்து ‘உல்ஜன்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, ராஜேஷ் கன்னா, ஜிதேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தனது அழகு மற்றும் பாவனைகளால் 1970 மற்றும் 80-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகத் திகழ்ந்தார்.
சோகமான காதல் கதை :
சுலக்ஷனா பண்டிட் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவ் குமாரை ஆழமாக காதலித்தார். அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், சஞ்சீவ் குமார், நடிகை ஹேமா மாலினியை காதலித்ததால், சுலக்ஷனாவின் காதலை ஏற்கவில்லை.
காதல் நிராகரிக்கப்பட்டதால் மனம் உடைந்த சுலக்ஷனா பண்டிட், வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. சஞ்சீவ் குமார் 1985-ல் காலமான பிறகு, அவர் சினிமாவில் நடிப்பதையும், பாடுவதையும் குறைத்துக்கொண்டு ஒதுங்கிவிட்டார். மேலும் ஒரு தற்செயல் சம்பவம் என்னவென்றால், சஞ்சீவ் குமார் மறைந்த நவம்பர் 6 என்ற அதே நாளில்தான், சுலக்ஷனா பண்டிட்டும் காலமானார்.
Read More : வருங்காலத்தில் AI என்னவெல்லாம் செய்யும்..? மனித வாழ்க்கை எப்படி இருக்கும்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!



