ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.15,000 வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டங்களை திருத்திய நிலையில், தற்போது கருவுறுதல் விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ’பூஜ்ஜிய வறுமை’ முயற்சியின் ஒரு பகுதியாக, பணக்காரர்கள் ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுக்கும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை நான் உருவாக்கியுள்ளேன். இது வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது மட்டுமின்றி, முழு குடும்பத்தின் நலனையும் உறுதி செய்யும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், ”ஆந்திராவில் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த தொகையானது மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தவிர, ஆந்திராவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிக குழந்தைகளைப் பெறுவதற்காக தம்பதிகளுக்கு நிதி உதவியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர்களுக்கு முன்னர் பொருந்தக்கூடிய இரண்டு குழந்தைகள் கொள்கை மாற்றப்பட்டுள்ளது” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.