கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணமான பெண்ணுக்கு அவரது கணவரால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு சையத் இனமுல் ஹக் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது, வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகுதான், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தான் அவரது இரண்டாவது மனைவி என்றும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு வேறு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் பெருமையாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து அந்தப் பெண் மீண்டு வருவதற்குள், கணவர் சையத் இனமுல் ஹக், தனது படுக்கையறையில் ரகசியமாக ஒரு கேமராவை வைத்து, அவர்களது தனிப்பட்ட தருணங்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், அந்த அந்தரங்க வீடியோக்களை வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்கள் சிலருடன் அவர் பகிர்ந்து கொண்டதுடன், தனது நண்பர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவிக்கவே, அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கணவர் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அபார்ட்மென்ட் வாங்குவதற்காக மனைவியின் நகைகளை விற்றுப் பணம் கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்தபோது, கணவர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோரும் தன்னை துன்புறுத்தியதாகவும், மைத்துனர் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சையத் இனமுல் ஹக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : பெரும் சோகம்..!! தூக்கி வீசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!! துடிதுடித்து பலியான 4 சிறுவர்கள்..!!