ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் ஃபோர்ஸ்’ ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய கொண்டாட்ட சைகை சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
நடப்பு ஆசிய கோப்பை சீசனில் க்ரூப்- ஏவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி, சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரன்களை குவிக்கும் நோக்கில் களமாடி வந்த இந்த கூட்டணி 3 ஆவது ஓவரில் உடைந்தது. ஃபகார் ஜமான் 15/9 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து சைம் அயூப் இணைய முதல் 5 ஓவருக்கு 42/1 ரன்கள் சேர்ந்தது.
குரூப் நிலை தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும் வகையில் சாஹிப்சாதா ஃபர்ஹான் பும்ரா ஓவர்களில் கூட பந்துகளை கவனித்து ஆடி பவுண்டரிகளை பறக்க விட்டார். சைம் அயூப் தனது பங்கிற்கு அதிரடி காட்ட, களத்தில் இந்த ஜோடி ஜொலித்தது. தொடர்ந்து சாஹிப்சாதா ஃபர்ஹான் 34 பந்துகளில் அரை சதத்தையும் பதிவு செய்தார். இதையடுத்து, ஃபர்ஹானின் 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்கள் எடுத்ததன் மூலம், பாகிஸ்தான் மொத்தம் 171/5 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்ஹான் அதை ஆக்ரோஷமாக கொண்டாடினார், அவரது துப்பாக்கிச்சூடு சைகை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பர்ஹான் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த பின்னர், இந்திய அணி ரசிகர்களை நோக்கி, தன் பேட்டை கையில் பிடித்து, அதை AK-47 போல அமைத்து குண்டுகளை தூரம் வீசும் வகையில் சைகை செய்தார். இந்த இழிவான சைகை கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் பர்ஹானின் கொண்டாட்டம், ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை குறிக்கும் வகையில் இருந்தது. அந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இரு நாடுகளையும் ஒரு முழு அளவிலான மோதலின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது.
ரசிகர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹானின் செயலை கடுமையாக விமர்சித்தனர், எதிராளிகளிடமிருந்து பரஸ்பர சுயமரியாதை இல்லாததால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை நடத்துவதை பிசிசிஐ தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். போட்டியைத் தொடர பிசிசிஐ மற்றும் இந்திய அணி எடுத்த முடிவிற்கு இன்னும் சிலர் கண்டனம் தெரிவித்தனர், ஃபர்ஹானின் கொண்டாட்டம் சமீபத்திய மோதல்களின் போது கொல்லப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகளை ‘கேலி செய்வது’ என்று கூறினர். இது இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.