தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்து வரும் அசுர வளர்ச்சி உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பப் புரட்சி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் என பலரும் சிலாகிக்கும் நிலையில், அமேசான் நிறுவனர் மற்றும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், AI முதலீடுகள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் 2025 மாநாட்டில் பேசிய ஜெஃப் பெசோஸ், AI தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்றும், இது மக்களுக்கு பெரும் நன்மைகளை தரக்கூடியது என்றும் பாராட்டினார். அதே சமயம், தற்போது AI துறை ஒரு ‘பப்பிள் சூழலுக்குள்’ இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை விட, பல மடங்கு அதிக தொகைக்கு அதில் முதலீடு செய்வதையே ‘பப்பிள்’ என்று குறிப்பிடுவார்கள். இந்த தற்காலிக வளர்ச்சி ஒரு கட்டத்தில் சரிந்து, மொத்த துறையின் மதிப்பையும் குறைத்துவிடும். 2000-ஆம் ஆண்டில் இணைய நிறுவனங்கள் சந்தித்த ‘டாட்-காம் பப்பிள்’ போல இது இருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த AI ‘பப்பிள்’, பொருளாதார சந்தையில் ஏற்படும் ‘பப்பிள்’ போல ஆபத்தானது அல்ல என பெசோஸ் வேறுபடுத்தினார். மேலும், 2008இல் நிகழ்ந்ததைப் போல, வங்கி அமைப்புகளைச் சிக்கலில் ஆழ்த்தி, மோசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். இதை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.
ஆனால், தொழில்துறை சார்ந்த ‘பப்பிள்’ அவ்வளவு மோசமானவை அல்ல. எல்லாம் முடிந்து, தூசி அடங்கிய பிறகு, மிகப் பெரிய நன்மைதான் மக்களுக்கு கிடைக்கும். இங்கு அதுவே நிகழப்போகிறது. செயற்கை நுண்ணறிவால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று பெசோஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெஃப் பெசோஸ் AI குறித்து நம்பிக்கை தெரிவித்தாலும், வேறு சில வல்லுநர்கள் அதன் ஆபத்துகள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமேடை இது குறித்து பேசியபோது, AI வளர்ச்சியால் வேலை இழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தொடக்க நிலை வேலைகளில் 50% வரை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்றும், உலக நாடுகள் இந்த அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமேடை சுட்டி காட்டினார். AI, ஒருபுறம் முதலீட்டு ஆர்வத்தை தூண்டி, புதிய உச்சங்களை நோக்கி செல்லும் அதேவேளையில், மறுபுறம் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு..!! தத்தளிக்கும் நேபாளம்..!! பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு..!!