தற்போதைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செய்து முடிப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த நிலை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மென்பொருள் உருவாக்குநர்கள், புரோக்ராம் எழுதுபவர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் ஏஐயின் தாக்கம் அதிகம் உள்ளது. ஏஐ கருவிகள் தானாகவே கோடிங் எழுதுவதாலும், தரவுகளை ஆய்வு செய்வதாலும், இந்தத் துறையில் வேலை இழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மனித வேலைகளை நீக்கி, நிறுவனங்களில் மனிதவளத்தைக் குறைக்கும் இந்த தொழில்நுட்பம், பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி எச்சரித்துள்ளார்.
”ஏஐ தொழில்நுட்பத்தால், 2030-ஆம் ஆண்டுக்குள், உலகளவில் 90% தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் நிலை உருவாகும்” என யம்போல்ஸ்கி கணித்துள்ளார். இந்த வேலை இழப்புக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார். ஏஐ-யானது, மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் ப்ராம்ப்ட் இன்ஜினியர்கள் போன்றோரின் வேலைகளையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, பல பெரிய நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக, மனித ஊழியர்களுக்கு பதிலாக ஏஐ-யை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகள் போன்ற துறைகளிலும் இது பரவி வருகிறது. வேலைகளை இழப்பதை விட வேகமாக ஏஐ வளர்ந்து வருகிறது என்று யம்போல்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள் மத்தியிலும், தொழில்துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



