தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன்படி நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், “யாரையும் மிரட்டி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுகவை மிரட்டியதாக சொல்பவர்கள், ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியல. யாரை கண்டு அவர்கள் பயந்து போய் இருக்கிறார்கள்? என தெரியல. மிரட்டுவதற்காக நாங்க யாரும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறுகிறார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன வந்திருக்கு? இன்னைக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில பங்கு கேட்கறது மாதிரி சொல்றாங்க. திமுக கூட்டணி நெருக்கடியியல் இருக்கு. விடுதலை சிறுத்தைகள் தொடருமான்னு தெரியல.
நீங்க ஏன் அண்ணா திமுகா பத்தி கவலைப்படுறீங்க. தமிழகத்துல பாரதிய ஜனதா ஆட்சிக்கு கொண்டு வரதுக்கு வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் நாங்கள் இப்பொழுது அண்ணா திமுக கூட கூட்டணி வச்சிருக்கிறோம். எங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வர வாய்ப்பு இருக்கிறது.
அதிமுகவின் கொள்கைகள், எங்களுடைய சிறிய திட்டம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கணும் திமுக ஆட்சி அகற்றப்படணும் இதுதான் எங்களுடைய கருத்து” என்று பதிலளித்திருக்கிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரவேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



