தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவரும், அதிமுக நிர்வாகியுமான ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் விளம்பரப் பலகைகள் வைக்கும்போது, அதில் தனது படத்தை மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஓரத்தில் இடம்பெறச் செய்வது இவரது வழக்கம்.
இவரது இந்த விளம்பர உத்தியைப் பார்த்த திருச்செந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இவரை அணுகி நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரிய அளவில் கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அந்த நிர்வாகி பெண்ணின் பேச்சுகளைத் தவிர்த்தாலும், தொடர்ச்சியான உரையாடல்களால் அவரிடம் மயங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிய நிலையில், தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். சம்பவத்தன்று, அந்த இளம் பெண் கூறியதன் பேரில் அதிமுக நிர்வாகி தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அவர் திருச்செந்தூர் பகுதியில் சென்றபோது, ஒரு சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தை வழிமறித்து, அப்பெண் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றியுள்ளனர்.
பின்னர் அவரது கண், கால்கள் மற்றும் கைகளைக் கட்டிய அந்தக் கும்பல், சிறிது தூரம் பயணம் செய்த பின், அவரை தேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அந்தக் கும்பல், அவரை கடுமையாகத் தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் மிரட்டி ஆடையை அகற்றி நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும், அவரது தலையை மட்டும் வெளியே தெரியுமாறு மணலில் புதைத்து வைத்து மீண்டும் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரமான செயலின்போது, நிர்வாண நிலையில் இருந்த நிர்வாகியை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். நீண்ட நேரம் சித்ரவதை செய்த அந்தக் கும்பல், அவரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். “பணம் கொடுக்கவில்லை என்றால் இங்கேயே சுட்டுக் கொல்வோம், உனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்” என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகி, தனது நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்பில் உள்ளவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ரூ.50 லட்சம் பணம் தேவை என்று கேட்டுள்ளார். ஆனால், அவரது பதற்றத்தைப் புரிந்து கொள்ளாத நண்பர்கள், “திடீரென உனக்கு ஏன் இப்போது ரூ.50 லட்சம் தேவை? சும்மா காமெடி பண்ணாதே” என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளனர்.
நீண்ட நேரம் போராடியும் பணம் கிடைக்காததால், கடத்தல் கும்பல் அவரைக் கடத்தலில் இருந்து விடுவித்துவிட்டு, அவரது செல்போன் மற்றும் கிடைத்த சில பொருட்களை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசில் புகார் அளித்தால் தனது இமேஜ் கெட்டுவிடும் என்று பயந்து அவர் யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில், அதிமுக நிர்வாகி தனது நண்பர் ஒருவரிடம், துப்பாக்கி முனையில் தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துப் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது. இந்த ஆடியோ வைரலானதை அடுத்து, குலசேகரப்பட்டினம் மற்றும் திருச்செந்தூர் போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இன்னைக்கு இந்த பொருட்களை மட்டும் பரிசா கொடுத்துறாதீங்க..!! உங்களுக்கு தான் பிரச்சனை வரும்..!!



