மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், அனைத்து சட்டப்பூர்வ ஆதாரங்களும் கண்ணன் குடும்பத்திற்குச் சாதகமாக இருந்ததால் ஆத்திரமடைந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி, பொன்னையனின் தூண்டுதலின் பேரில், 10-க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்துடன் கண்ணனின் இடத்திற்குச் சென்று வீட்டை இடித்து, மரங்களை பிடுங்கி, ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அப்போது, தனியாக இருந்த கண்ணனின் மகளான 14 வயது சிறுமியை தாக்கியதுடன், அவரது ஆடைகளை கிழித்து பொன்னையன் அவமானப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர், மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் நேரடியாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக துணை காவல் கண்காணிப்பாளரிடம் அனுப்பி, துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.