நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கட்சியை ஆரம்பித்த நிலையில் தற்போது தீவிர கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு முதல் இதுவரை நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் விஜய் திமுகவையும் பாஜகவையும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக குறித்த விமர்சனங்களை விஜய் அறவே தவிர்த்து வருகிறார்.
ஊழல் நிறைந்த கட்சி என திமுகவையும், பிளவுவாத அரசியல் செய்யும் கட்சி என பாஜகவையும் விஜய் விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கே ஆளாகவில்லையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏன் விஜய் அதிமுகவை விமர்சிக்க மறுக்கிறார் அல்லது தவிர்க்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதிமுக ஓட்டுகளை குறி வைப்பதால் தான் விஜய் விமர்சனங்களை தவிர்த்து வருகிறார் எனவும் கூறப்பட்டது.
இப்படியான நிலையில் அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் எப்போதோ இணைந்து விட்டதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்ட நிலையில் தற்போது பின்புறம் வழியாக பாஜகவை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை வலுவிழந்து விட்டதால் அக்கட்சியை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பாஜகவை துணிந்து எதிர்க்கின்ற ஒரே தலைவர் விஜய் தான். குர்ஆன் மீது ஆணையிட்டு கூறுகிறோம்; எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணியும் உறவும் கிடையாது என்று அழுத்தமாக உறுதியுடன் கூறுகிறோம் என்றார். பெரியார் இறக்கவில்லை அவரை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தான், விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அரசியலில் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக, ஒரே முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய் மட்டும் தான். அடுத்த நான்கு மாதத்தில் அனைத்தும் புரியும் எப்படி ஒரு புரட்சி தலைவர் விஜய் உருவாக்கப் போகிறார் என்று தெரியும் என ஆதவ் அர்ஜூனா பேசினார்.
Read more: #Flash : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவா? நகைப்பிரியர்கள் ஷாக்..