இன்று, ஹாங்காங்கிலிருந்து டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் (IGI) தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டாலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கினர்.
ஜூலை 22 செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட AI 315 விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்து, வாயிலில் நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் பேசிய போது, “ஜூலை 22, 2025 அன்று ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானம் AI 315, தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்தது. பயணிகள் இறங்கத் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது, மேலும் கணினி வடிவமைப்பின்படி APU தானாகவே மூடப்பட்டது.” என்று தெரிவித்தார்..
மேலும் “விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன; இருப்பினும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் இறங்கி பாதுகாப்பாக உள்ளனர். மேலும் விசாரணைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது, மேலும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
எனினும் இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.. அதே போல் 140 பயணிகளுடன் கோவாவிலிருந்து வந்த இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..