ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தின. இந்த திடீர் வான்வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை அந்த நாடு பிடிவாதமாக மறுத்து வந்த நிலையில், இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு :
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “ஈரான் ஆட்சியாளர்கள் மிகவும் கொடூரமானவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். அவர்களிடமிருந்து அமெரிக்க மக்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை. அதற்காகவே இந்த அச்சுறுத்தல்களை நாங்கள் அழித்து வருகிறோம்,” என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானின் மிக உயரிய அதிகாரத்தில் இருந்த உச்ச தலைவர் அலி கமேனி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு செய்திகளை மேற்கோள் காட்டித் தெரிவித்தார். “வரலாற்றின் மிகப்பெரிய தீய சக்திகளில் ஒருவரான கமேனி இப்போது உயிருடன் இல்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், கமேனி இறந்துவிட்டாரா என்பது குறித்து ஈரான் தரப்பிலோ அல்லது சர்வதேச செய்தி நிறுவனங்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பதிலடி கொடுத்த ஈரான் :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு ஈரான் உடனடியாகப் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. ஜெருசலேம் உள்ளிட்ட மத்திய கிழக்கின் பல முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால் அந்த நகரங்களில் நள்ளிரவில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொள்வதால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் இந்த எதிர்த்தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளும் தற்போது உச்சகட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.



