திருப்புவனம் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருப்புவனம் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அஜித்குமார் அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்த உள்ளனர்.
இன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக – அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகள், மற்றும் அணி, பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டணி அமைந்த பின்னர் அதிமுக-பாஜக இணைந்து நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.