தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், திரையுலகில் தனது தனி சிறப்பான இடத்தை வைத்திருந்தாலும், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் சாதனைகளை படைத்து வருகிறார். நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வளித்து, தனது முழு கவனத்தையும் பந்தய உலகிற்குத் திருப்பியுள்ள அஜித், தற்போது சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திரையுலகில் அவர் நுழைந்த காலம் முதலே, அஜித்குமாருக்கு ரேசிங் மீது அலாதியான ஆர்வம் உண்டு. காதல் மன்னனாக திரையில் ஜொலித்தாலும், ஆக்ஷன் கதாநாயகனாக மாறிய பிறகு, அவருடைய உண்மையான வேகம் திரையிலும், நிஜ வாழ்விலும் வெளிப்பட தொடங்கியது. அஜித் இதற்கு முன்னரும் பல்வேறு பந்தயங்களிலும், ஃபார்முலா ரேசிங் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
குறிப்பாக, 2003 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் போட்டியிலும், பின்னர் 2010 இல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் பங்கேற்றது, அவர் ஒரு தொழில்முறை ரேஸர் என்பதை உலகுக்கு உணர்த்தியது. நடிப்பை தாண்டி, ஒரு நடிகர் தனது ஆர்வத்தை தொழிலாக மாற்றி அதில் சாதனை படைக்க முடியும் என்பதற்கு அஜித் ஒரு சிறந்த உதாரணம்.
சமீபத்திய அவரது ரேசிங் பயணம், ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. இங்கு நடந்த முக்கியமான சர்வதேச கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான ஏ.கே. ரேசிங் அணி (AK Racing Team) கலந்துகொண்டது. உலகின் பல முன்னணி ரேசிங் குழுக்களுடன் கடுமையான சவாலை எதிர்கொண்ட அஜித்தின் அணி, அபாரமான ஓட்டும் திறனையும், குழு ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, துபாயில் நடந்த கார் பந்தயத்திலும் அஜித் வெற்றி பெற்ற நிலையில், இப்போது உலக அரங்கில் பார்சிலோனாவில் பெற்ற இந்த வெற்றி, அவரது ரேசிங் மீதான அசைக்க முடியாத ஈடுபாட்டையும், குழுவின் அயராத உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.
Read More : உங்கள் PAN CARD தொலைந்து விட்டால் என்ன செய்வது..? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?