திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் அஜித் நடித்திருந்தார். இவ்விரு படங்களும் அஜித்தின் திரைப் பயணத்தில் முதல் முறையாக இந்தப் புதிய இயக்குநர்களுடன் இணைந்ததால், கோலிவுட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் அவற்றின் மீதுதான் இருந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ‘விடாமுயற்சி’ திரைப்படம் இயக்குநர் மகிழ் திருமேனியைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், கதையை மாற்ற சொன்னதாலேயே சொதப்பியது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி, அஜித்தின் முந்தைய கதாப்பாத்திரங்களின் கலவையாக ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், பொதுவான சினிமா ரசிகர்களிடம் எடுபடவில்லை.
இந்நிலையில் திரைப்படங்களை விட, தனது விருப்பமான கார் பந்தயத்தில் அஜித் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார். துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்த ரேஸ்களில் தனது குழுவுடன் பங்கேற்ற அவர், இப்போதும் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே தங்கி ரேஸ் சர்க்யூட்டுகளில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கார் பந்தயம் நடக்கும் காலங்களில் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது அஜித்தின் சமீபத்திய முடிவுகளில் ஒன்றாகும்.
நடிப்பு, கார் ரேஸ் என பிஸியாக இருந்தாலும், தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் நேரம் செலவிடுவதில் அஜித் எப்போதும் கவனமாக இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, அங்கு கூடிய ரசிகர்களுடன் அவர் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
கோயிலில் மேலாடை இல்லாமல் அஜித் இருந்தபோது, அவரது வலது மார்பில் இருந்த டாட்டூ பலரின் கவனத்தை ஈர்த்தது. அது என்ன உருவம் என்று பலரும் தேட தொடங்க, அது அஜித்தின் குல தெய்வமான பகவதி அம்மனின் உருவம்தான் என்று தெரியவந்துள்ளது. இந்த தெய்வத்தை அஜித் அடிக்கடி வந்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது.



