வங்கக்கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும் என்று வானிலை மையம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கு – மத்திய வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.. இது அக்.26-ம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அக்.27-ம் தேதி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.. அக்.27-ம் தேதி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



