சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, பிறப்பு பதிவு செய்யாதவர்கள், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27, 2026-ஆம் தேதியே கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக அந்த தகவல் பரவி வருகிறது.
ஆனால், மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பிஐபி உண்மை சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) இந்தத் தகவல் குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க எந்தவொரு இறுதித் தேதியையும் அல்லது காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் போலியானது என்றும் PIB திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த வதந்தி, கடந்த ஆகஸ்ட் 2023-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம்’ தொடர்பான செய்திகளை மையமாக கொண்டு பரப்பப்படுகிறது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அனைத்துப் பிறப்புகள் மற்றும் இறப்புகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உண்மைதான்.
இருப்பினும், இதற்கான காலக்கெடு எதுவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், உண்மைத்தன்மை சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



