குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர 16 குஜராத் அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.. குஜராத் ஆளுநர் அமைச்சர்களின் ராஜினாமா கடித்ததை ஏற்றுக் கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மதியம் 12:39 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை மதியம் 12:39 மணிக்கு விரிவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 புதிய அமைச்சர்கள்
அமைச்சரவை விரிவாக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுமார் 10 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.. தற்போதைய அமைச்சர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மாற்றப்படலாம் என்றும் கூறினார்.
தற்போதைய குஜராத் அமைச்சரவையில் முதல்வர் படேல் உட்பட 17 அமைச்சர்கள் உள்ளனர். எட்டு பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள், மற்றவர்கள் பலர் இணை அமைச்சர்கள் (MoS) ஆவர்
182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்ட குஜராத்தில் 27 அமைச்சர்கள் அல்லது அவையின் மொத்த பலத்தில் 15 சதவீதம் இருக்கலாம். இந்த மாத தொடக்கத்தில், குஜராத் அரசாங்கத்தின் இணையமைச்சர் ஜகதீஷ் விஸ்வகர்மா, மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்குப் பதிலாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பிரிவின் புதிய தலைவரானார். டிசம்பர் 12, 2022 அன்று பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.