இந்திய குடிமக்களின் அடையாள சான்றாக திகழும் ஆதார் அட்டை, தற்போது வெறும் முகவரிச் சான்றாக மட்டுமல்லாமல், எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு துருப்புச் சீட்டாகவும் உள்ளது. குறிப்பாக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு, பிணையம் ஏதுமின்றி 50,000 ரூபாய் வரை கடன் பெறும் வசதி ஆதார் அட்டை மூலம் சாத்தியமாகிறது. மத்திய அரசின் இந்தச் சிறப்பான நிதி உதவித் திட்டம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு குறுந்தொழில் முனைவோரை மீண்டும் தலைதூக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு ‘பிஎம் ஸ்வநிதி’ (PM SVANidhi) என்ற உன்னதத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், வியாபாரிகள் தங்களின் தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடுகளைச் செய்யவோ படிப்படியாக 50,000 ரூபாய் வரை நிதி உதவி பெற முடியும். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்தக் கடனைப் பெறுவதற்கு எந்தவிதமான சொத்துப் பிணையமும் தேவையில்லை என்பதாகும்.
இந்தக் கடன் உதவித் திட்டம் பயனாளிகளுக்கு ஒரே தவணையாக வழங்கப்படாமல், அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து மூன்று நிலைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை ஓராண்டிற்குள் முறையாகத் திருப்பிச் செலுத்தும் நேர்மையான பயனாளிகளுக்கு, அடுத்த கட்டமாக 20,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதையும் உரியக் காலத்தில் செலுத்தி முடிப்பவர்களுக்கு, இறுதியாக 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு அவர்களின் வணிக வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக நிற்கிறது.
தகுதியுள்ள சிறு வியாபாரிகள் இந்த சலுகையைப் பெற தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களுடன் அருகிலுள்ள வங்கிகளை அணுகலாம். வங்கிகள் மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் மிக எளிதாக இந்த நிதி உதவியைப் பெற முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின் மூலம், சிறு வணிகர்கள் கந்துவட்டி கொடுமையிலிருந்து விடுபட்டு, சுயமரியாதையுடன் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More : உலகை வலம் வந்த பிரதமர் மோடி..!! 4 ஆண்டுகளில் இத்தனை கோடி செலவு செய்துள்ளாரா..? வெளியான புள்ளி விவரங்கள்..!!



