தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வியூகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியை தொடர்ந்து வரும் முதலமைச்சர் என். ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்ய துணிந்துள்ளார். புதுவையில் பாஜகவுடனான உறவு நீடிக்கும் என்று அறிவித்துள்ள அதே வேளையில், தமிழகத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கைகோர்க்க அவர் எடுத்துள்ள முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அண்மையில் காரைக்காலுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த கையோடு, ரங்கசாமி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, புதுவை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, இன்று திலாசுப்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார். வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தச் சந்திப்பில், தனது நிலைப்பாட்டை ரங்கசாமி மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
புதுவையில் தாமரையுடன் கூட்டணி தொடரும் என்பதில் மாற்றமில்லை என்றும், தமிழக களத்தில் மட்டும் தவெக-வுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள போவதாகவும் அவர் சுரானாவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த முடிவின் பின்னணியில் வலுவான சமூக மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதுவையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் ரங்கசாமிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் அவரது சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மக்கள் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருவதால், அங்குத் தனது செல்வாக்கை ஒரு வாக்குகளாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கூட்டணிகளை அமைப்பது அரசியலுக்குப் புதிதல்ல என்றாலும், தமிழகத்தில் ரங்கசாமி – விஜய் கூட்டணி அமைந்தால் அது வட மாவட்டங்களில் ஒரு புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.



